நடிகர் விஜய்க்கு பா.ஜ.க. மேலிடம் வலைவிரித்து வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் நேற்று தான் கே.எஸ்.அழகிரி கையெழுத்துப் போட்டார். அதுமட்டுமல்ல சத்தியமூர்த்தி பவன் வந்த உதயநிதி ஸ்டாலினை வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். மேலும், உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்தும் அவரிடம் பாராட்டி பேசியிருந்தார் கே.எஸ்.அழகிரி.
இந்நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நெல்லை சென்ற கே.எஸ்.அழகிரி அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் எனக் கூறியிருப்பதுடன் யாரும் யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசியவர் என்பது இங்கே திரும்பிப்பார்க்கத் தக்கது.
அரசியல் கட்சிகளில் இருக்கும் அணிகளை போலவே வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் பாஜக சொல்வதை மட்டும் செய்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறிய கே.எஸ்.அழகிரி இந்தியா கூட்டணியை திமுக வலிமையாக வழிநடத்துகிறது என்றார். இதனால் திமுகவுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சோதனைகள் நடத்தப்படுவதாக பொதுமக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள் எனக் கூறினார்.
நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும் என்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பணத்தை குவிப்பதற்கு நீட் ஒரு வரப்பிரசாதம் என்றார் கே.எஸ்.அழகிரி. நெல்லையிலிருந்து தூத்துக்குடி செல்லும் அவர், அங்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.