ஆளுங் காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்த ‘குற்றப் பத்திரிகை’ வெளியிட்டு, சத்திஸ்கர் மாநிலத்தில் ‘சடுகுடு’ விளையாட்டை ஆரம்பித்துவிட்டது பா.ஜ.க.!

தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் தொடங்கி 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். ஒருவேளை இதில் பின்னடைவு ஏற்பட்டால் அது நாடாளுமன்ற தேர்தல் வெற்றியையும் பாதிக்கும். அதேபோல காங்கிரசுக்கும் இந்த தேர்தல் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதியும், இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியில் காங்கிரஸ் இருக்கிறது. எனவே ஆட்சி அதிகாரத்தை இந்த முறை கைப்பற்ற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக முக்கியமான முன்னெடுப்பை பாஜக மேற்கொண்டிருக்கிறது.

அதாவது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய ‘குற்றப்பத்திரிகை’ எனும் புத்தக தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் காங்கிரஸ் கட்சி இயற்கை வளங்களை அதிக அளவில் கொள்ளையடித்துள்ளதாகவும், அரசு வேலைகளுக்கு லஞ்சம் பெறுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் இருப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மக்களை துன்புறுத்துவதை போன்ற கார்ட்டூன்களும் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம் தங்களது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ள பாஜக, அதில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘ராம் லல்லா தர்ஷன் யோஜனா’ திட்டம் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளது. இந்த திட்டத்தின்படி ஏழை எளிய மக்களுக்கு அயோத்தி சென்று ராமர் கோயிலை தரிசித்து வர அரசு நிதியுதவி வழங்கும். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை தொகை போலவே, சத்தீஸ்கரிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளது.

இந்த வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தின் முகப்பில் ராமர் சீதை படம் அச்சிடப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அறிவித்திருந்த இலவச திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார். ஆனால் தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையில், கோயிலுக்கு செல்ல நிதி உதவி செய்யப்படும் என அறிவித்திருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal