‘தி.மு.க.வை வீழ்த்த எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க.! ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமின் ‘தனி மனித ஆதிக்கத்தால்’ அ.தி.மு.க. அழிவுப் பாதையில் பயணிக்கிறது’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும், ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சுமார் 2 லட்சத்து 86 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றதால் ஆளும் கட்சி ஆக முடியாமல் போனது.

ஆனால், இப்போது புரட்சித்தலைவி அம்மாவின் மரணத்திற்கு பிறகு சுமார் 3 சதவீத பிராமணர்கள் வாக்கு பா.ஜ.க.வை நோக்கி முழுவதுமாக நகர்ந்து விட்டநிலையில் எடப்பாடி தனது துரோகத்தாலும், சாதிய வன்மத்தாலும் சுமார் ஒரு கோடிக்கும் மேலான முக்குலத்தோர் வாக்குகளையும் இழக்கும் சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது.

இதற்கு பசும்பொன்னில் புறவாசல் வழியே எடப்பாடி ஓடி வந்த நிகழ்வே சாட்சி. இது மட்டுமல்லாமல் எடப்பாடியின் சமச்சீர் இல்லாத அரசியலால் மேற்கு மண்டலத்தில் அருந்ததியர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சமூகங்களின் வாக்குகளும் அ.தி.மு.க.வை கைகழுவ தொடங்கி விட்டன.

இதற்கு பத்தாவது சுற்றில் கட்டுத்தொகை காப்பாற்ற முட்டி போட்டு முழி பிதுங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலே ஒரு சாட்சி.

ஆனால் இந்த கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு பொது அறிவும், பொதுவாகவே அறிவும் இல்லாதவராகவும், கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழாரே என்று நம்பும் அளவுக்கு தற்குறியாகவும், கட்சி பெயரில் உள்ள திராவிடம் என்பதற்கு கூட அர்த்தம் தெரியாத கூமுட்டையாகவும் ஆக மொத்தத்தில் தலைமைத் தகுதி என்பதே கடுகளவும் இல்லாத எடப்பாடிக்கு மேற்படி உண்மைகள் எல்லாம் எப்படி புரியும்’’ என காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் வெளியிட்டிருப்பது சாதாரண அறிக்கை அல்ல, அ.தி.மு.க.வின் உண்மை நிலவரம் என்பது அ.தி.மு.க.வின் சாதாரண தொண்டனுக்கு புரிகிறது. ஆனால், எடப்பாடிக்கு ஏனோ புரியவில்லை!

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை எடப்பாடி பழனிசாமியை ‘காலம்’ விரைவில் உணரவைக்கும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal