அண்ணாமலைக்கு நெருக்கமான பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது சென்னையில் அடுத்தடுத்து 3 வழக்குகள் பதிவான நிலையில், தற்போது தென்காசியிலும் ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறார். இதனால், அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்தக் கொடிகம்பம் அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களால் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. அப்போது ஜேசிபி வாகனம் சேதப்படுத்தப்பட்ட நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அமர் பிரசாத் ரெட்டி மீது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா விளம்பரத்தில் இடம்பெற்ற மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடி படத்தை ஒட்டியது தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். மேலும், வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தென்காசி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திலும் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அண்ணாமலையின் பாதயாத்திரை தென்காசியில் நடைபெற்ற போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்த அமர் பிரசாத் ரெட்டி மீது அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு கொட்டும் மழைக்கு இடையே அமர் பிரசாத் ரெட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமர் பிரசாத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 4ஆம் தேதியான நாளைக்கு ஒத்தி வைத்து செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்து வரும் நிலையில், அவர் மீது அடுத்தடுத்த வழக்குகளில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருவது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சென்னையை ஒட்டி 3 வழக்குகள் இருந்த நிலையில் இப்போது தென்காசி மாவட்டத்திலும் அமர் பிரசாத் ரெட்டி மீது விசாரணை நடைபெறுவதால், அமர் பிரசாத் ரெட்டி சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.