தமிழகத்தில் ஆளுநருக்கும், அரசுக்கு இடையேயான மோதல் பற்றிக்கொண்டிருக்கும் நிலையில், கைலாசாவில் இருந்து, ‘மதுரை ஆதீனம் நான்தான்’ என கொளுத்திருப் போட்டிருக்கிறார் நித்தியானந்தா..!

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நித்தியானந்தாவுடன் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக திடீரென நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி தப்பி ஓடினார்.

தற்போது, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ள நித்தியானந்தா அந்த நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. எனினும், நித்தியானந்தா உருவாக்கியிருப்பதாக சொல்லும் கைலாசா எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது குறித்து அதிகாரிகளும் இன்னும் உறுதிபட தெரிவிக்கவில்லை.

முன்னதாக, கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். ஆனால் நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து நித்தியானந்தாவின் நியமனம் திரும்ப பெறப்பட்டது. அதன்பிறகு தன்னை இளைய ஆதினம் பட்டத்தில் இருந்து விடுவித்தது செல்லாது என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நித்தியானந்தா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் நித்தியானந்தா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘293-வது மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகர் நியமிக்கப்பட்டது செல்லாது எனவும், அடுத்த மதுரை ஆதீனம் நான் தான்’’ என்றும் நித்தியானந்தா தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி முரளி சங்கர் முன்னிலையில் விசாரணைக்குக் வந்தது. அப்போது நித்தியானந்தாவின் புதிய மனு குறித்து விளக்கமளிக்க மதுரை ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal