எல்லோருக்குமே வாய்ப்பு ஒருமுறை கிடைக்கும்! அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துபவர்கள் சாதிக்கிறார்கள்! பயன்படுத்தாதவர்கள் சறுக்குகிறார்கள். அந்த வகையில் தென் மண்டல ஐ.டி.விங்கில் சிறப்பாக செயல்பட்டு எடப்பாடியின் குட்புக்கில் இடம்பெற்று, தற்போது மாநில செயலாளர் பதவியை பெற்றிருக்கிறார் ராஜ் சத்தியன்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருவதை போல், எந்த தொகுதியில் நின்றால் வெற்றிவாய்ப்பு பிரகாசம் என்பது பற்றி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளரும், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வின் மகனுமான ராஜ் சத்யன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான களப்பணிகளை தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார் ராஜ் சத்யன். காரணம், மதுரையில் நிலவிய உட்கட்சிப் பூசல்கள்தான். இந்த முறை மதுரை அதிமுகவில் நிலவும் உட்கட்சி கோஷ்டி பூசல்களால் மீண்டும் தனது வெற்றிவாய்ப்பு பறிபோய்விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ள ராஜ் சத்யன், இதனால் தான் விருதுநகர் பக்கம் கவனம் செலுத்துவதாக கூறுகிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

இன்னும் சொல்லப்போனால் விருதுநகர் தொகுதியில் களப்பணியை கூட அவர் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் மாணிக்கம் தாகூர் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் துரை வைகோ போட்டியிடுவார். இதனால் அவர்களை எதிர்த்து போட்டியிடுவதில் தங்களுக்கு பெரிதாக எந்த சிக்கலும் இருக்காது எனக் கருதுகிறது ராஜ் சத்யன் தரப்பு.

இதனிடையே வரும் தேர்தலிலும் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு.வெங்கடேசன் தான் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இவர் வெற்றி பெற்ற தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மீண்டும் மதுரையில் போட்டியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதுமட்டுமல்ல அவரது தந்தை ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் விருதுநகரில் ஓடி ஆடி வேலை செய்வதில் எந்த சிரமமும் இருக்காது எனத் தெரிகிறது.

அ.தி.மு.க.வில் தனது தீவிர அரசியல் செயல்பாடுகளால் எடப்பாடியாரின் செல்லப்பிள்ளையாகவே வலம் வரும் ராஜ் சத்தியன், எடப்பாடியார் எந்தத் தொகுதியில் சீட் கொடுக்கிறாரோ, அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவும் ஆயத்தமாகி வருகிறார். ஆக, மொத்தத்தில் இந்தமுறை ராஜ் சத்தியன் பாராளுமன்றத்திற்குள் நுழைவது உறுதி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal