ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, முரணான தகவல்களை வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் தமிழகத்தில் சட்ட்ம ஒழுங்கு மோசமாக இருப்பதாக புகார் தெரிவித்து வந்தார். இதற்கு தமிழக அரசு சார்பாக பதிலடியும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த 25 ஆம் தேதி கருக்கா வினோத் என்பவர் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில், ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர் என பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கு டிஜிபி சங்கர் ஜிவால் வீடியோ ஆதாரத்துடன் பதிலடி கொடுத்தார். தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரைக்கும் கருக்கா வினோத் தனியாகவே நடந்தே வந்திருக்கிறார். முதல் பெட்ரோல் குண்டை வீசிய பின்னர் இரண்டாவது பெட்ரோல் குண்டை பற்ற வைக்கும் போது காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டுமே வந்ததாகவும், ஆளுநர் மாளிகைக்குள் அந்த நபர் செல்ல முயலவில்லையெனவும் கூறப்பட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியில், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். அதில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மை சம்பவத்தை மறைத்து ஆளுநரின் அலுவலம் சார்பாக தகவல் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆளுநரின் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் இதுபோன்று முன் பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டுள்ள்தாகவும், பொய்யான தகவல் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையிலும் பொதுமக்களின் அமைதிக்கு ஊர் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

எனவே பொய்யான செய்தி வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் மீது புகார் தெரிவிக்கும் வகையில் தகவல் வெளியிட்ட ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal