தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், கைது நடவடிக்கைக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நடவடிக்கை எடுத்துவருவதை மீனவக் குடுபங்கள் பாராட்டி வருகின்றனர்.
மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை மீட்கவும், மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் பின்புறம் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் ரூ 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இறகு பந்து விளையாடி போட்டிகளை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘‘புயல் அபாயத்தை தொடர்ந்து கரை ஒதுங்கிய தூத்துக்குடி சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதியுள்ளேன். நிச்சயமாக இன்று ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன்.
விரைவிலே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்த அவர்களது குடும்பங்களில் சேர ஒன்றிய அரசு உதவிகள் செய்து அவர்களை மீட்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார்.
இது போன்ற பிரச்சனைகள் இலங்கையை அடுத்து மாலத்தீவிலும் தொடர்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இதற்கு ஒன்றிய அரசு இலங்கை தமிழக மீனவர்கள் மற்றும் இங்குள்ள மீனவ அமைப்புகளோடு பேசி அதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெறாத சூழல் உள்ளது அதை மறுபடியும் தொடர்ந்து நடத்தினாலே இப்பிரச்சனை தீர்க்க முடியும்’’ என்றார்.
தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்துவரும் கனிமொழி எம்.பி.யின் முயற்சி பாராட்டுக்குரியது!