மத்திய அரசின் அடுத்த அதிரடியாக இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மசோதாக்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் நாடாளுமன்றக் குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட் என குற்றவியல் சட்டங்கள், தண்டனை சட்டங்கள், சான்று சட்டங்கள் அமலில் உள்ளன. சுதந்திரத்துக்கு முன் 1860 களில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் ஐபிசி உள்ளிட்ட இந்த சட்டங்களில் பல அவ்வப்போது நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த 3 சட்டங்களையும் மொத்தமாக மாற்ற இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஐபிசிக்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா என்றும், சிஆர்பிசிக்கு பதில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், எவிடன்ஸ் சட்டத்துக்கு பதில் பாரதிய சாக்ஷ்யா என்றும் இந்தியில் பெயர் மாற்றி சட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் கூறி இருந்தார். இந்த 3 மாற்றங்களும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பல்வேறு குற்றங்களுக்கு புதிய தண்டனைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
தற்போது பெருகி வரும் கும்பல் படுகொலைகள், பிரிவினைவாதம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான தண்டனைகள் புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை, 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என புதிய தண்டனைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த மசோதா நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு வந்தது. அப்போது திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக அந்த மசோதா நாடாளுமன்ற குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாடாளுமன்ற குழு கூட்டம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
ஆக மொத்தத்தில் அமித் ஷாவுக்கு தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து ‘ஷாக்’ கொடுத்திருக்கிறது!