சட்டமன்றக் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு, அப்பட்டமாக அரசியல் செய்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றக் கதவை தட்டியிருக்கிறது அ.தி.மு.க.!
இந்நிலையில், நீதிமன்றக் கதவுகளைத் தட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்,
‘‘கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 66 அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021ஆம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக தானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் தேர்ந்தெடுக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்ற கட்சியின் செயலாளராக அன்பழகன் மற்றும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கபட்டனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜூலை 17ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரையும், துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்துள்ளதாக சபாநாயருக்கு கடிதம் அனுப்பியும், ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் பலமுறை முறையிட்டும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் இருப்பதால், எதிர்க்கட்சியினர் விவாதங்களில் தலையிடுவதால், எங்கள் கட்சியினரால் திறமையாகச் செயல்பட முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். எனவே, கட்சியில் சட்டமன்ற பொறுப்பிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்களை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’’ எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.