‘தமிழக ஆளுநரை மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தல் வரை ஆர்.என்.ரவியே ஆளுநராக இருக்க வேண்டும். அப்போதுதான் தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ என் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மேலிடத்திற்கு’ திடீர் வேண்டுகோள் வைத்திருப்பதுதான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

தலைநகர் சென்னையில் திமுக வழக்கறிஞர் ஏ.என்.புருஷோத்தமனின் மகள் ஏ.பி.பூர்ணிமாவின் திருமணம் இன்று நடைபெற்றது. இதை தலைமையேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். உடன் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏக்கள், சென்னை மேயர் பிரியா மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்,

‘‘திமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிகளவில் அதிகாரம் பெற்று தர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வர நடவடிக்கை எடுத்த போது, அதை நிறைவேற்ற எந்த ஒரு மாநிலமும் முன்வரவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாடு தான் நிறைவேற்ற முன்வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி மேயராக இருந்தேன். தற்போது இட ஒதுக்கீடு 40 சதவீதம். ஏன் 50 சதவீதத்திற்கு மேல் என்று சொல்லலாம்.

இனி வரும் நாட்களில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதை மகிழ்ச்சியோடு தான் சொல்கிறேன். இதுதான் திராவிட மாடல். இன்று பெரிய பெரிய பதவியில் அமர்ந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன? எனக் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள். இன்று நடந்திருக்கும் திருமணம் தான் திராவிடம். அப்படி கேட்க வைத்திருப்பது தான் திராவிடம்.

கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் என்னவெல்லாம் புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிவர். என்னைப் பொறுத்தவரை திராவிடம் என்றால் என்ன? எனக் கேட்கிறார் பாருங்கள். அவரே தொடர்ந்து இருக்கட்டும். அவர் மூலம் நம்முடைய பிரச்சாரத்திற்கு வலு சேர்ந்து கொண்டே செல்கிறது. மத்தியில் இருக்கக்கூடிய பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றி விடாதீர்கள்.

குறைந்தபட்சம் நாடாளுமன்ற தேர்தல் வரையாவது விட்டு வைக்கவும். ஏனெனில் எங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆளுநர் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை என்றார். மேலும் பேசுகையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் பார்க்கும் போது இந்தியா கூட்டணிக்கான வெற்றி விரைவில் வரவுள்ளது.

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக எப்படி மிகப்பெரிய வெற்றியை பெற்றதோ, அதேபோல் வரவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். எனவே மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு நீங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal