மத்திய அரசின் திட்டங்களை பிரசாரம் செய்யும் சங்கல்ப யாத்திரையை சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நடத்த கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சகமானது Viksit Bharat Sankalp Yatra என்ற யாத்திரையை நடத்த உள்ளது. இந்த யாத்திரை நவம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது.
நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. தகவல் தொடர்பு வசதிகளுடன் 2,700-க்கும் மேற்பட்ட வேன்கள் ரதங்களின் வடிவத்தில் இந்த பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும். இப்பிரசாரத்தின் போது மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பழங்குடியினத்தவர் வசிக்கும் பகுதிகளுக்கு முதலில் இந்த யாத்திரை வேன்கள் செல்லும். மொத்தம் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 3,700 நகராட்சிகள் என 14,000-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ரத வேன்கள் பயணிக்கும். இப்பயணத்தின் போது பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்கான கிரெடி கார்டு திட்டம் ஆகியவை இந்த பிரசாரத்தின் முக்கிய அம்சங்கள். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த பிரசாரம், சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தொடங்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி தடை விதித்துள்ளது. இதனால் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் டிசம்பர் 5-ந் தேதி க்குப் பின்னர் இந்த பிரசார யாத்திரை நடைபெறும்.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இம்மாநிலங்களில் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இந்த வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் டிசம்பர் 5-ந் தேதி வரை 5 மாநிலங்களிலும் மத்திய அரசின் பிரசார யாத்திரைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.