தமிழக அமைச்சரவையில் கெத்தாக வலம் வந்த செந்தில் பாலாஜி 3 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் உடல் எடை குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான், ‘என்னைத் தொட்டுப்பார்..?’ என சாவல் விட்ட அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டின் அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பத்தை பாஜகவினர் அமைத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி பெறாமல் கொடுக்கம்பத்தை வைத்ததாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பாஜகவினரும் சம்பவ இடத்திற்கு வந்ததால் பதற்றமான சூழல் உருவானது.

இதனை அறிந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் கொடிக்கம்பத்தை அகற்ற முயன்ற போது அதன் கண்ணாடியை பாஜகவினர் உடைத்தனர். இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்து நவம்பர் 3ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது புகார் எழுந்திருந்தது. அந்த புகாரின் பேரில் தற்போது சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசாரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட உள்ளார். ஆரூத்ரா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய காவல் துறை ஆயத்தமாகி வருவதை அடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal