கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முகிலன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு பூத்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டும்.

பாசறையில் கண்டிப்பாக 25 பேரை 18 வயது நிறைந்த புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அதிக புதிய இளம் உறுப்பினர்களை கட்சிக்கு கொண்டு வருவார்கள். கட்சியில் உள்ள மூத்தவர்கள், இளம் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பூத் கமிட்டி தொடர்பாக சொந்த வேலைகளை முடித்துவிட்டு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கட்சி பணியாற்றினால் போதும். ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாக பணியாற்றலாம்.

இப்போது உள்ள சூழ்நிலையில் தி.மு.க.வை மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வரவேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். விசுவாசமாக பணியாற்ற வேண்டும். சிறு, சிறு மனஸ்தாபங்கள் இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் கண்டிப்பாக 59 பேர் கொண்ட பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.

அந்த வகையில் கோவை வடக்கு மாவட்டத்தில் 1067  பூத் கமிட்டிகள் உள்ளன. ஒரு பூத் கமிட்டிக்கு 59 பேர் வீதம் 62 ஆயிரத்து 950 வேரை நியமிக்கலாம். அப்படி நியமித்து பணியாற்றும் போது நாம் எளிதாக வெற்றியடையலாம். தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. கவர்னர் மாளிகையிலேயே பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு துணிச்சலான முடிவு எடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என துணிச்சலுடன் அறிவித்தார் அதனை தாங்க முடியாமல் மு.க. ஸ்டாலின் மறைமுக கூட்டணி என புலம்பி வருகிறார். எனவே நாம் மக்களை சந்தித்து கட்சி பணியாற்றி அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி, அவைத்தலைவர் வெங்கடாசலம் உள்பட கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து புறநகர் தெற்கு மாவட்ட பொது கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal