நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறுமாதம் இருக்கும் நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துவிட்டது. இந்த ‘முறிவு’ தி.மு.க.வை யோசிக்க வைத்திருக்கிறது. காரணம், பா.ஜ.க. மௌனமாக இருப்பது, இரு திராவிடக் கட்சிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கூட்டணி முறிவில் அ.தி.மு.க. உறுதியாக இருப்பது… அதே சமயம் பா.ஜ.க. மௌனமாக இருப்பது பற்றியும் தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பி.ஜே.பி.யைப் பொறுத்தளவில் தற்போது நடக்க இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. காரணம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டாக இந்த ஐந்து மாநில இடைத்தேர்தல் அமையும் என்பதுதான்.

இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அ.தி.மு.க.விற்கு தாவுகிறார்களா? இல்லை, தி.மு.க. கூட்டணி ‘ஸ்ட்ராங்கா’ இருக்கிறதா? என்பதையும் ‘மேலிடம்’ கூர்ந்து கவனித்து வருகிறது. இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் ‘தூது’விட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்திருக்கும் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை இணைத்து பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அப்போது, எடப்பாடி வசம் இருக்கும் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அப்படி முடக்கு, அ.தி.மு.க.வை பா.ஜ.க. உடைத்தாலும் ‘லாபம்’ தி.மு.க.வுக்குத்தான் என்பதையும் ‘மேலிடம்’ உணராமல் இல்லை.

அதே சமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். காரணம் கடந்த முறை கூட்டணி வைத்து தோல்வியைத் தழுவினார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் முதலில் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு, பின்னர் கூட்டணி வைத்ததை பொதுமக்கள் ரசிக்கவில்லை. இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி தெளிவான முடிவில் உறுதியாக இருக்கிறார்!

இதற்கிடையே, சமூக வலைத்தள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் சென்னையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘ என் மனைவி எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை பார்த்துக்கொண்டு இருப்பது தான் பாஜகவின் வேலை. கோவில்களை இடித்ததாகவும் வதந்திகள் பரப்புகின்றனர். சாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த ஒரு கூட்டம் உழைத்து வருகிறது. இந்தியாவுக்கே எதிரானது தான் பாஜக.

திமுக எப்போதும் ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு திமுக எதிரி கிடையாது. திமுக ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன. வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளம் மூலம் வதந்திகள் பரப்பபடுகின்றன. 1000 கோவில்களுக்கு குடுமுழுக்கு செய்திருக்கிறோம். கோவில் சொத்துக்களையும் தொடர்ந்து மீட்டு வருகிறோம். அதிமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை. அந்த கட்சிகள் கொள்கையில்லா கட்சிகள்’’இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி முறிவை முழுதாக நம்பவில்லை. அதனால்தான் இப்படி பேசியிருக்கிறார். அதே சமயம், தி.மு.க.கூட்டணியில் உள்ள கட்சிகளும் ‘எடப்பாடியின் சாய்ஸை’ எதிர்நோக்கி காத்திருப்பதால் முதல்வரும் யோசிக்கத் தொடங்கிவிட்டாராம். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பரில் வெளியானவுடன், அந்த மாதமே சில அதிரடிகளை ஆரம்பித்து விட்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும்’’ என்றார்கள்.

நடக்கட்டும்… நடக்கட்டும்..?-

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal