மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 2020-ம் ஆண்டு மதுரை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை முடித்து வைக்க முயற்சி செய்கின்றனர். எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், ‘மதுரையில் நடைபெற்று வரும் குற்ற வழக்கில் அரசு தரப்புக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் மனுதாரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. சாகசமிக்கதாகவும் தோன்றுகிறது. இதன்படி இந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.