குஜராத் மாநிலத்தை மையமாக கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனம், அதானி குழுமம். அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி.
உலகெங்கும் துறைமுகங்களின் செயலாக்கம் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல முக்கிய வர்த்தகங்களில் ஈடுபட்டு, பெரும் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம், கடந்த வருடம் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது. இந்நிலையில் அதானி குழுமம், 2019லிருந்து 2021 வரை உள்ள காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விலைக்கு இறக்குமதி செய்து மறைமுக மோசடியில் ஈடுபட்டதாகவும் அதன்காரணமாகவே இந்தியாவில் பயனர்களுக்கான மின்சார கட்டணம் உயர்ந்து வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இதற்கிடையே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள 25 கட்சிகளை கொண்ட எதிர்கட்சிகளின் கூட்டணியில்
ஒரு அங்கமான மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசிய காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன் கவுதம் அதானியை சந்தித்து பேசியிருந்தார். இச்சந்திப்பு குறித்து இந்திய தேசிய கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் புது டெல்லியில், “அதானி சந்திப்பு பற்றி ஏன் நீங்கள் சரத் பவாரிடம் கேட்கவில்லை?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பதிலளித்த அவர் கூறியதாவது:
‘நான் சரத் பவாரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் கவுதம் அதானியை காக்கவும் இல்லை. ஆனால், நரேந்திர மோடிதான் இந்திய பிரதமர். அவர்தான் அதானியை காத்து வருகிறார். எனவே நாங்கள் அவரைத்தான் கேள்வி கேட்க வேண்டும். இம்முறை மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு சுவிட்சை அழுத்தினால் உடனடியாக அதானி பாக்கெட்டுக்கு பணம் போகிறது. உலகம் முழுவதும் அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன; அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் எதுவும் நடைபெறவில்லை’. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.