சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் லியோ படம் ரிலீஸ் ஆகாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அப்படம் எக்கச்சக்கமான பிரச்சனைகளில் சிக்கி உள்ளது. ஒரு பக்கம் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என பிரச்சனை ஓட, மறுபுறம் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் ஓனர்களுக்கு ஷேர் சம்பந்தமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் உள்ளது. இதனால் சென்னையில் உள்ள புகழ்பெற்ற திரையரங்குகள் இன்னும் லியோ பட புக்கிங்கை தொடங்காமல் வைத்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையில் ரசிகர்களின் கோட்டையாக கருதப்படுவது கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தான். சினிமா பிரபலங்களே படத்தின் ரிசல்டை தெரிந்துகொள்ள இந்த தியேட்டருக்கு தான் வருவார்கள். அந்த அளவுக்கு ரோகிணி தியேட்டருக்கென தனி மவுசு உண்டு. அந்த தியேட்டரிலும் லியோ படத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கப்படாமல் இருந்ததால் விரக்தி அடைந்த ரசிகர்கள் இன்று நேரடியாக தியேட்டருக்கே சென்றுள்ளார்.

அங்கு போன ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதில் லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படாது என குறிப்பிடப்பட்டு இருந்ததைக் கண்டு ஷாக் ஆன ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். ஷேர் பிரச்சனையில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாகவே லியோ படத்தை திரையிடப்போவதில்லை என்கிற முடிவுக்கு ரோகிணி திரையரங்க நிர்வாகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரோகிணி மட்டுமின்றி கமலா, வெற்றி, சங்கம், தேவி போன்ற சென்னையில் உள்ள முதன்மையான திரையரங்குகளும் முன்பதிவை தொடங்காமல் வைத்துள்ளனர். இன்றைக்குள் இந்த பிரச்சனைக்கு முடிவு காணாவிட்டால் இது லியோ படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது. ரோகிணி தியேட்டரில் லியோ டிரைலர் ரிலீஸ் செய்தபோது ரசிகர்கள் அங்குள்ள இருக்கைகளை அடித்து நொறுக்கிய சம்பவங்களும் அரங்கேறின. இதனால் 10 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal