காதலிக்க மறுத்த அக்கா மகளை தாய்மாமன் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம்தான் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் & – ஜெயப்பிரதா தம்பதியினர். இவர்களது மகள் ஜீவிதா கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். ஜெயப்பிரதாவின் தம்பியான சின்னகாசிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 35 வயதான டிரைவர் சரண் ராஜும் ஜீவிதாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். சரண் ராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இதனால் தம்பிக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க ஜெயப்பிரதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அம்மா மறுப்பு தெரிவித்துவிட்டதால் சரண்ராஜிடம் பேசுவதைத் தவிர்த்து ஜீவிதா ஒதுங்கிவிட்டார். இதனால் கடந்த ஒரு வாரமாக ஜீவிதா செல்லும் இடங்களுக்கெல்லாம் சரண் ராஜும் சென்று பின் தொடர்ந்துள்ளார். ஆனால், ஜீவிதா அவரிடம் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஜீவிதா மீது சரண் ராஜ் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் ஜீவிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த சரண் ராஜ், ஜீவிதாவை அங்குள்ள மற்றொரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காதல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீவிதாவை வாயில் துணியை வைத்து பொத்தி கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். தொடர்ந்து, ஜீவிதாவின் செல்போனை எடுத்துக்கொண்டு தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ஜீவிதா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுதொடர்பாக நாட்றாம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து ஜீவிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சரண் ராஜ் எழுதியுள்ள கடிதத்தில், “அன்புள்ள அக்கா, மாமா, அம்மா, அப்பாவுக்கு சரண் ராஜ் எழுதுவது. நானும் ஜீவிதாவும் நான்கு வருடங்களாக காதலித்தோம். திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டோம். ஆனால், முடியவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துவிட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள். இப்படிக்கு சரண் ராஜ் -ஜீவிதா” என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கி இருந்தவரை தனிப்படை போலீசார் பிடித்து அழைத்து வந்தனர். சரண் ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காதல் விவகாரத்தில் சொந்த அக்கா மகளையே தாய்மாமன் கொலை செய்திருப்பது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal