புதுச்சேரியில் பெண் அமைச்சர் பதவி விலகிய விவகாரத்தில் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அட்சி அமைந்துள்ளது. அங்கு காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்தார். திடீரென கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சந்திரபிரியங்கா பதவி விலகியதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முதலமைச்சர் ரங்கசாமி சந்திரபிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு திருமுருகனை அமைச்சராக்க துணைநிலை ஆளுநரிடம் கடிதம் அளித்த நிலையில், அதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது.

முதல்வர் ரங்கசாமி சந்திரபிரியங்காவை கலந்தாலோசிக்காமல் அவருடை பதவியை பறிப்பதற்காக துணைநிலை ஆளுநர் மூலமாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, பெண் அமைச்சர் ராஜினாமா தொடர்பாக முதலமைச்சருக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்களை வெளியில் சொல்வது, ரகசியகாப்பு பிரமாணத்திற்கு எதிரானது, முரணானது என கூறியுள்ளார்.

எனவே தார்மீக பொறுப்பேற்று தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு உடனே அனுப்ப வேண்டும். அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா குறித்து முதலமைச்சர் ரங்கசாமி இதுவரை வாய் திறக்கவில்லை. அவரது பதவி விலகல் இதுவரை மர்மமாகவே உள்ளது.

சந்திரபிரியங்கா ஜாதி மற்றும் பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக மன உளைச்சலுடன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு புதுச்சேரி அரசிடமிருந்து யாரும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி. ஒன்றியத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட ஆணையம் தாமாக முன்வந்து முதல்வர் ரங்கசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal