ஏலம் எடுக்கும்போது எலத்தில் பொருளின் விலையை ஏற்றிக்கொண்டே சென்று இறுதியில் எதிராளியின் தலையில் அதிக சுமையை ஏற்றுவது ஒரு ராஜதந்திரம்! தி.மு.க. கூட்டணியில் ‘அதிக சீட் பேரத்தை’ ஏற்றிவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தி.மு.க. கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி எப்படி சீட் பேரத்தை ஏற்றி ‘அரசியல்’ செய்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ள சிலரிடம் பேசினோம்.

‘‘சார், முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தளவில் ஆட்சி நடத்துவது, கட்சியை வழிநடத்துவது என இரண்டிலும் அவரது முழுமையான பங்கு எவ்வளவு இருக்கிறது என்பது, அவருடன் இருக்கும் துரைமுருகன், கே.என்.நேரு போன்ற சீனியர்களுக்கு தெரியுமா என்பதே சந்தேகம்!

நேற்று நடந்த மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியைப் போல், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகள், அந்தந்த மாநிலத்தில் கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம்’ என்றார்.

ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதிலிருந்தே தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது ‘சீட் பேரத்தை’ உயர்த்த ஆரம்பித்திருக்கிறது. காரணம், சிறுபான்மையினரின் சிறிய அமைப்புகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தவிர, நேற்று கட்சி கமல்ஹாசன் கூட தற்போது இரண்டு சீட் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். நடிகர் கமல்ஹாசனே இரண்டு தொகுதிகள் கேட்டுவரும் நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் இந்தமுறை இரண்டு சீட் கேட்கிறாராம். தொல் திருமாவளவன் ஐந்து சீட் கேட்கிறாராம். வைகோ குறைந்தது 4 சீட்டு கொடுத்தால்தான், நான் ம.தி.மு.கவை வழி நடத்த முடியும் என்கிறாராம். கம்யூனிஸ்டுகளும் தலா 4 கேட்கிறதாம்..!

காங்கிரஸ் கட்சியோ ‘மேலிடத்தில் சொல்லி’ இந்த முறையும் 9 சீட்டுக்கு குறையாமல் பெற்றுவிடவேண்டும் என முயற்சித்து வருகிறார்களாம். காரணம், காங்கிரஸ் தலைமையை அவ்வப்போது மு.க.ஸ்டாலின் அழைத்துப் பேசுவதுதான். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வால்தான் காங்கிரசுக்கு ஆதாயம். ஆனால், காங்கிரஸை ஸ்டாலின் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பதுதான், பி.ஜே.பி. மேலிடத்தைக் கூட எரிச்சலடைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி, ‘தட்டுங்கள் திறக்கப்படும்..!’ என தி.மு.க. கட்சிகளுக்கு மறைமுக அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பை காரணம் காட்டி சீட் பேரத்தை ‘கூட்டி’ கூட்டணிக் கட்சிகள் கேட்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

ஏலத்தின் விலையை ஏற்றுவதுபோல், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ‘சீட் பேரத்தை’ எடப்பாடி பழனிசாமி உயர்த்திவிட்டு, அக்கட்சியை நிலைகுலையச் செய்யும் ராஜதந்திர வேலையில் இறங்கியிருக்கிறார். இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு எந்தளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal