அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழாவையொட்டி ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகப்படுத்த ஆயத்தமாகி வருகிறார் எடப்பாடி கே.பழனிசாமி.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு அக்கட்சித் தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், “கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” 17.10.2023 – செவ்வாய் கிழமையன்று 52-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடுகிறது.
அந்த வகையில் அன்று காலை 10.30 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி ரி. பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.
மேலும், கடந்த 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்தபோதும், மாநாடு முடிந்து ஊர் திரும்பும்போதும், எதிர்பாராத விதமாக மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதியுதவியும்; விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியும் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமது திருக்கரங்களால் நிதியுதவி வழங்க உள்ளார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதே போல், கழகத்தின் 52-ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும்; கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும்; நம் இருபெரும் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திரு உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தின் தொடக்க நாளை விழாக் கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.