தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் உத்தரவாத மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி உட்பட முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.த.செல்லபாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில், அரசின் செயல்பாட்டை விமர்சித்தேன். தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வேன் என்று உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்தார்.

இந்த உத்தரவாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, செல்லபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal