சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு சட்டப்போராட்டங்களை கடந்து கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை விசாரித்த அமலாக்கத்துறை அவரை இரவோடு இரவாக கைது செய்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவர்கள் சோதனை செய்த போது இருதய பகுதியில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. அதன் பின்னர் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிக்கையின் நகலைப் பெற்ற செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருமுறை மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16ம் தேதி மற்றும் செப்டம்பர் 20ம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன் தினம் திடீரென செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்து ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். இன்று வழக்கு விசாரணையின் போது ஜாமின் மனு தொடர்பாக அமலாக்கத்துறையிடம் விளக்கம் கேட்ட பிறகு ஜாமின் வழங்குவது தொடர்பாக நீதிபதி முக்கிய முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal