பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறுமாதம் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு வந்த நிலையில், ‘ஆபரேஷன் 9 ’ பற்றி அண்ணாமலை முதன் முறையாக பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக சிறப்பு முன்னுரிமையாக 9 தொகுதிகளைத் தேர்வு செய்துள்ளதாகவும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதல் முறையாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளபடியான பாஜகவின் முன்னுரிமை தொகுதிகள் தமிழ்நாட்டில் 9 லோக்சபா தொகுதிகள். கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, வேலூர், கோவை, ஈரோடு, தென்சென்னை, ராமநாதபுரம், நீலகிரி ஆகியவை இந்த 9 தொகுதிகளாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

2019 பாராளுமன்றத் தேர்தலில் இந்த 9 தொகுதிகளில் 5-ல் பாஜக போட்டியிட்டவை. அதிலும் 5 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்கள் 2-வது இடம் பிடித்தவர்கள். ஆகையால் இந்த தொகுதிகளில் போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் பாஜக முன்னுரிமை தருவதில் சிக்கல் இருக்காது. ஆனால் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கோவையில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் இருவருமே ஆளுநராகிவிட்டனர். இதனால் இவர்களுக்கு பதில் புதியவர்கள் களமிறக்கப்படலாம்.

பாஜகவின் முன்னுரிமை தொகுதிகளான 9 தொகுதிகளில் யார் வேட்பாளர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். இதன்படி கன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தொழிலதிபர் மகன் அல்லது சசிகலா புஷ்பா, திருநெல்வேலி அல்லது ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், சிவகங்கையில் மீண்டும் எச்.ராஜா ஆகியோருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த முறை ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், சிவகங்கையில் எச்.ராஜா, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் 2-வது இடத்தில் இருந்தனர். அப்போது அதிமுகவும் கூட்டணியில் இருந்தது. அதைத் தாண்டி பாஜக வேட்பாளர்கள் எதிர்கொண்டது திமுகவின் கூட்டணி வேட்பாளர்களைத்தான். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிவகங்கையில் காங்கிரஸ், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் பாஜக வேட்பாளர்கள் மோதினர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அல்லது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, ஈரோடு தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகன், தென்சென்னையில் நடிகை குஷ்பு ஆகியோர் போட்டியிடக் கூடும் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் தொகுதியைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சியின் ஏசி சண்முகம், ‘ரிசர்வ்’ செய்து வைத்திருக்கிறார். இதனால்தான் மத்திய அமைச்சர் அமித்ஷா, வேலூர் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அத்துடன் பாஜக கூட்டணியில்தான் தொடர்ந்து நீடிப்போம் எனவும் ஏசி சண்முகம் அதிமுகவுக்கு எதிராக முதல் கூட்டணி கட்சியாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அண்ணாமலையின் ‘ஆபரேஷன் 9’ எந்தளவிற்கு எடுபடும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal