டாஸ்மாக் விவகாரத்தில் பார் ஏலம் விடுவது முதற்கொண்டு, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வங்குவது வரை சர்ச்சையில் சிக்கி இன்றைக்கு சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. சென்னை உள்பட மாநகர்களில் இன்னும் முறையாக பார்கள் செயல்படவில்லை.
இந்த நிலையில்தான் திருச்சி புறநகர்ப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் (டி.டி. எடுப்பதில்) மீண்டும் 60 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், இது தொடர்பாக பார் ஏலம் எடுத்தவர்களை வைத்து உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் மீட்டிங் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு சம்பந்தமான நிகழ்ச்சிகள்தான் நடத்தவேண்டும். மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்துவார்கள். ஆனால், பார் ஏலம் எடுத்தவர்களை வைத்து ஒரு அரசு ஒன்றிய அலுவலகத்தில் முதன் முறையாக நேற்று (10-10-2023) மீட்டிங் போட்டிருக்கிறார்கள். இந்த மீட்டிங்கிற்கு அனுமதி கொடுத்தது யார்..? அந்த அதிகாரம் யாருக்கு இருக்கிறது..?
அந்த மீட்டிங்கில் பார் உரிமையாளர்கள் மற்றும் கலந்துகொண்டவர்கள் செல்போனை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர், ‘அமைச்சர் கே.என்.நேருவின் உத்தரவின் பெயரில்தான் இந்த மீட்டிங் நடக்கிறது. ஒவ்வொரு பார் உரிமையாளரும், அரசுக்கு எடுக்கும் டி.டி.யில் 60 சதவீத கமிஷனை எங்களிடம் கொடுத்துவிட வேண்டும்.
நாங்கள் ஒரு குழுவை அமைத்து திருச்சி முழுவதும் வசூல் செய்து அமைச்சரிடம் கொடுக்கிறோம். நாங்கள் யாருக்கு அனுமதி கொடுக்கிறோமோ அவர்கள்தான் சந்துக்கடை வைத்து நடத்த வேண்டும். சந்துக்கடை வைத்து நடத்துபவர்களுக்கு டாஸ்மாக் கடையில் இருந்து ‘தாராளமாக’ சரக்குகளை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர் வைசர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, வருகிற 1ம் தேதியில் இருந்து எங்களுடைய குழுவைச் சேர்ந்தவர்கள் பார்களில் வந்து மாதம் ஒருமுறை வசூல் செய்வார்கள். அதற்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்று அந்த மீட்டிங்கில் பேசியிருக்கின்றனர்.
உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் இந்த மீட்டிங் (10ம் தேதி) நேற்று மாலை 5 மணிக்க தொடங்குவதாக அறிவிக்கப்பட்டாலும் 6.30 மணிக்கு தொடங்கி 7.30 மணிவரை நடைபெற்றது. இது தொடர்பாக அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியிருக்கும் ஃபுட்டேஜை எடுத்துப் பார்த்தாலே புரியும். ஆனால், உப்பிலியபுரம் ஒன்றியத்தைப் பொறுத்தளவில் அவ்வப்போது சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் அழிக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆக மொத்தத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி டாஸ்மாக்கில் வசூலித்தவர்கள், தற்போது அமைச்சர் கே.என்.நேருவின் பெயரைப் பயன்படுத்துவதுதான் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவே விளக்கம் கொடுத்தால்தான் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும்..!