சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பெயில் கிடைக்க இருக்கிறதாம். இதற்கிடையே, மீண்டும் முக்கிய இலாகா அவருக்கு தர இருப்பதாக ‘தலைமை’ உறுதியளித்ததைத் தொடர்ந்து சிறையில் உற்சாகத்தில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அல்லி விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் நபர்களில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை எனவும், மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வில்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

பாஜகவில் ஏன் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் எப்படி சாட்சிகளை கலைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையின் போது, பா.ஜ.வில் ஏன் இணையக் கூடாது என அமலாக்கத் துறை கேட்டதாக கூறப்படும் வாதத்தை மறுத்த அமலாக்கத் துறை தரப்பு, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது எனவும், செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பதால், செல்வாக்கான அவர், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிடப்பட்டது. இந்த மனு மீது நீதிபதி அல்லி கடந்த மாதம் 20ம் தேதி தீர்ப்பளித்தார். அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில் சட்ட ரீதியாக அவர் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரமாக முயன்று வருகிறாராம். முக்கியமாக பெயில் வாங்குவது தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம். இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜியை சந்தித்த ‘தலைமைக்கு’ நெருக்கமான தி.மு.க.வின் மூத்த வழக்கறிஞர், ‘‘ நீங்கள் விரைவில் வெளியே வர போகிறீர்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கண்டிப்பாக உங்களுக்கு பெயில் கிடைக்கும். கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு பெயில் கிடைத்ததும் மீண்டும் முக்கிய இலாகா உங்களுக்கு கிடைக்கும்.

முன்பு எப்படி உங்களுக்கு மரியாதை கிடைத்ததோ, அதைவிட அதிகமாக கிடைக்கும். உங்களின் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எல்லாம் மீண்டும் வழங்கப்படும். அதை பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான முழு ஆதரவும் வழங்கப்படும். கவலைப்பட வேண்டாம்.. உங்களுக்கு கூடுதல் பவர்கள் வழங்கப்படும்’’ என்று கூறியிருக்கிறாராம்.

இதனால் பெயில் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த செந்தில் பாலாஜி கொஞ்சம் உற்சாகத்தில் இருக்கிறாராம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal