பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எடப்பாடி வலை விரித்த நிலையில், உஷரான மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கணக்குகளை முடித்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இது பற்றி அறிவாலயத்திற்கு நெருக்கமான மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பிரதமர் மோடி மத்தியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா? இந்தியா கூட்டணி போட்டு வைத்து திட்டங்கள் எடுபடுமா? என 2024 மக்களவை தேர்தல் குறித்து அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன… தென்னிந்திய மாநிலங்களை பொறுத்தவரை மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமே அதிகமிருக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது தமிழ்நாடு. திராவிட கட்சிகளை தாண்டி தேசிய கட்சிகளால் ஜொலிக்க முடியாது என்ற நிலை காணப்படுகிறது. அதுமட்டுமின்றி திமுக, அதிமுகவும் பகிர்ந்தளிக்கும் சீட்களை தான் பெறக் கூடிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இந்நிலையில் அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் தான் உள்ளன. தற்போதே கூட்டணி குறித்த பேச்சுகள் தொடங்கிவிட்டன. பாஜக உடன் கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதால் தேர்தல் மும்முனை போட்டியாக மாறி வருகிறது. இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக குறிவைத்துள்ளது. இதுபற்றி தகவல் கிடைத்ததுமே கூட்டணி கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தற்போதே கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட வேண்டும் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

அதன்பேரில் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றோம் என்று விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை கூற தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக கூட்டணியை உறுதி செய்து சீட் பேரம் குறித்து திமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்கும். இந்த இடத்தில் தான் முக்கியமான கேள்வி எழுகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீட்டை எதன் அடிப்படையில் மேற்கொள்ளும்? இதுதொடர்பாக அக்கட்சி வட்டாரத்தில் விசாரிக்கையில், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் என்ன ஃபார்முலா பின்பற்றப்பட்டதோ, அதே பாணியில் தான் 2024 மக்களவை தேர்தலிலும் திமுக பின்பற்றுகிறது.

அதன்படி, மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகியவை தலா 2, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தலா 1 என 18 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த முறை இந்திய ஜனநாயக கட்சிக்கு அளித்த சீட் இம்முறை மக்கள் நீதி மய்யத்திற்கு அளிக்கப்படலாம். ஏனெனில் அக்கட்சி பாஜக பக்கம் தாவிவிட்டது. எஞ்சிய 20 இடங்களில் திமுகவே போட்டியிடும். ஆனால் ஒரு புதிய சிக்கல் இருக்கிறது. கடந்த தேர்தலில் மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி (ஈரோடு), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராசு (நாமக்கல்), விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் (விழுப்புரம்) ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

எனவே தேர்தல் ஆணையக் கணக்கின் படி, இவர்கள் அனைவரும் திமுக வேட்பாளர்களாகவே கருதப்பட்டனர். வெற்றி பெற்ற பின்னரும் திமுக என்றே குறிப்பிடப்பட்டது. எனவே இம்முறை தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கிறது. இதுதவிர கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமா? இல்லை தொகுதிகள் மாற்றப்படுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. இதையொட்டி பூத் கமிட்டிகள் நிலவரம் தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் மு.க.ஸ்டாலின் அறிக்கை கேட்டிருந்தார்.

மேலும் திமுக மாவட்ட செயலாளர்கள் மூலமும் ஒவ்வொரு தொகுதி நிலவரம் குறித்து ரகசியமாக சர்வே நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு இருக்கும் என்கின்றனர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கரூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளை பறிக்க திமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரிய சிக்கலாக வெடிக்கலாம் எனக் கூறுகின்றனர். மதிமுகவை பொறுத்தவரை விருதுநகரில் துரை வைகோவை நிறுத்த காய் நகர்த்தி வருகின்றனர்.

இதுதவிர ஈரோடு, திருச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளிலும் ஒரு கண் வைத்துள்ளதாம். இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி கடந்த முறையை போல ராமநாதபுரத்தில் போட்டியிடலாம். ஏனெனில் சிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதி. இல்லையெனில் திருச்சிக்கு வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. விசிகவை பொறுத்தவரை விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளை தக்க வைத்து கொள்வர் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மீது ஒரு கண் இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரை கோவை, மதுரை, திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் தான் என்கின்றனர். கோவையை குறிவைத்து திமுக கூட்டணியில் புதிதாக இணைய மக்கள் நீதி மய்யத்தின் கமல் ஹாசன் மும்முரம் காட்டி வருகிறார். இந்த விஷயத்தை கம்யூனிஸ்ட்கள் உடன் பேசி திமுக எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி முன்வந்து நிற்கிறது. இதையெல்லாம் தாண்டி, கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளை, அ.தி.மு.க.வில் வலையில் சிக்காமல் இருக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவிட்டால் முதல்வர் மு.க.ஸ்டாலின்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal