வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. ‘குறுக்கு’ வழியில் எப்படியாவது சீட் வாங்கிடவேண்டும் என சிலர் துடிப்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களை வேதனையடைய வைத்திருக்கிறது.
இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.
‘‘சார், கலைஞர் காலத்தில் தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் பரிந்து செய்பவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், தற்போது எந்தப் பரிந்துரைக்கும் இடமில்லை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கும், துடிப்பானவர்களுக்கும்தான் சீட் என உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். அதன் படி தி.மு.க.வில் வேட்பாளர் லிஸ்டும் ரெடியாகிவிட்டது. இளைஞரணியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க.விலகிய நிலையில் அக்கட்சியின் உள்ள நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், எடப்பாடியின் ‘நிழலாக’ வலம் வருபவரைப் பார்த்தால் எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என ‘நிழலான’ பிரமுகரை அதிகாலையில் அவரது தோட்டத்தில் சிலர் சந்தித்து வருகிறார்களாம். அதன் பிறகு, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் அவரது வீட்டிற்கும் படையெடுத்து வருகிறார்களாம்.
காரணம், இவரைப்பார்த்தால்தான் சீட் கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. சமீபத்தில் நடந்த நியமனங்களில் கூட தகுதி வாய்ந்தவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘கொடுத்தவர்களுக்கு’ பதவியை வாங்கிக் கொடுத்திருக்கிறார் நிழாலானவர். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே நிலை நீடித்து, தகுதியில்லாதவர்களுக்கு சீட் கொடுத்தால், அ.தி.மு.க. அதலபாதாளத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். யாரை நிறுத்தினால் வெற்றி பெற வைக்க முடியும். அவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவரை நிறுத்தினால் இவருக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடக்குமா? என்பதை எல்லாம் ஆராய்ந்து வேட்பாளர்கள் தேர்வு நடக்க வேண்டும்.
காரணம், வரும் நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க.விற்கு மட்டும் வாழ்வா? சாவா? தேர்தல் இல்லை. அ.தி.மு.க.விற்கும்தான். அ.தி.மு.க. படுதோல்வியடைந்தால், அக்கட்சிக்கு எதிர்காலம் இருக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி. எனவே எடப்பாடியார் ‘நிழலை’ நம்பாமல் ‘நிஜத்தை’ நம்ப வேண்டும்’’ என்றனர்.
தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி ஒரு முதலமைச்சராக எடப்பாடியார் தமிழகத்தை எப்படி வழிநடத்தினாரோ? அப்படி, அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தையும் வழிநடத்த வேண்டும் என்கின்றனர் உண்மையான எம்.ஜி.ஆர். காலத்து மூத்த நிர்வாகிகள்!