தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், மகளிர் அணியின் பொறுப்பாளருமான கனிமொழி எம்.பி., தலைமையில் நாளை திருச்சியில் மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

திமுக மகளிர் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு இதுவரை அந்த அணி சார்பில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தான் நாளை திருச்சியில் இந்தக் கூட்டத்தை நடத்துகிறார் கனிமொழி எம்.பி. இதற்காக திருச்சி கரூர் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் வரும் 14ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவுள்ள திமுக மகளிர் உரிமை மாநாடு குறித்தும் அதில் திரளாக பங்கேற்பது பற்றியும் கனிமொழி பேச இருக்கிறார். அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டி மகளிர் அணி நிர்வாகிகள் சென்னைக்கு வர வேண்டும் என்பதால் இப்போது ஒரு முறை அப்போது ஒரு முறை என சென்னைக்கு அலைய வேண்டாம் என்பதை மனதில் வைத்தே புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தை திருச்சியில் நடத்துகிறார் கனிமொழி.

திருச்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து 4 மணி நேரம் முதல் 5 நேரத்தில் வந்து சேர்ந்துவிடலாம். காலையில் ஊரிலிருந்து புறப்பட்டால் கூட இரவே ஊர் திரும்பிவிடலாம். அந்தளவு போக்குவரத்து வசதிகள் ரயில், பேருந்து, என உள்ளன. இதனிடையே இது குறித்து திமுக மகளிர் அணி சார்பில் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி & திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நாளை 7ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்குத் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில்,கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார்.

கலைஞர் நூற்றாண்டை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது, ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்ட மகளிர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொள்கின்றனர்.

திருச்சிக்கு வரும் கனிமொழி எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க காத்திருக்கிறார்கள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உடன் பிறப்புக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal