நாகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.அப்போது காவிரி நீர் விவகாரத்தில் மவுனம் காக்கும் ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்திற்கு ஒன்றிய பாஜக அரசு துரோகம் மட்டுமே செய்கிறது என்று கூறினார். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் சிதம்பரத்தில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்தும், கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். கடலூரில் அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது மேடை ஏற முயன்ற பண்ருட்டி முன்னாள் பெண் எம்.எல்.ஏ. சத்யாவை சொந்த கட்சியினரே ஏற விடாமல் தடுத்ததால் பரபரப்பு நிலவியது. உட்கட்சி பிரச்சனை காரணமாக சத்யாவை முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் மேடை ஏற விடாமல் வழி மறித்து நின்றுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.