‘நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் இப்போது தமிழகத்தில் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்’ என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ‘‘தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டம் நான் முதல்வன் திட்டம். பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு படித்து முடித்தப் பிறகு என்ன பணிக்குச் செல்வது என்பதற்கான வழிகாட்டும் திட்டம்தான் இது. கடந்த ஆண்டு, முதல்வரின் பிறந்தநாளன்று தொடங்கப்பட்ட திட்டம். 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை 13 லட்சம் என்ற இலக்கை அடைந்திருக்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் 1500 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினேன். இன்று மீண்டும் ஒரு 1200 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன். இத்திட்டத்தின் மூலம் பணி பெற்றவர்களுக்கு ஒரு வருடத்துக்கு குறைந்தது 2.50 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் அளவுக்கு இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

அப்போது அவரிடம், வரும் மக்களவைத் தேர்தலில், திமுக &- பாஜக இடையேதான் போட்டி என்று அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘இதுகுறித்து அதிமுக தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும் ஒன்றுதான். எங்கள் கட்சியின் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலை எதிர்கொள்வோம். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் இப்போது தமிழகத்தில் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்றார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் மகனே பேசியிருக்கிறார் என்று பிரதமர் கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நான் ஏற்கெனவே பலமுறை பதில் சொல்லிவிட்டேன். சிஏஜி அறிக்கையைப் பற்றி பேசினோம், மணிப்பூர் மாநிலம் கடந்த 5 மாதங்களாக என்ன நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இந்த விவகாரத்தை திசைதிருப்பத்தான் சனாதன சர்ச்சையை பற்றி பேசுகின்றனர். சனாதனம் குறித்து நான் தொடர்ந்து பேசுவேன். பெரியார், அம்பேத்கர் சனாதனம் குறித்து பேசினார்கள். எங்கள் கட்சித் தலைவர்கள் பலரும் பேசியிருக்கின்றனர். அதைவிட நான் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை. எனவே, பாஜகவினர் திசைத்திருப்ப வேண்டாம்’ என்று உதயநிதி கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal