கலைஞர் இருக்கும் போது சரி… ஜெயலலிதா இருக்கும் போதும் சரி… ஒவ்வொரு சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக்கி, அந்த சமுதாயத்தினரை திருப்திப்படுத்துவார்கள்! தமிழகத்தில் காலம் காலமாக இதுதான் நடக்கும்!

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தளவில் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ‘சாதித்துக்’ காட்டக்கூடியவர் அமைச்சர் கே.என்.நேரு! அ.தி.மு.க.வில் அமைச்சராக இருப்பவர்கள் வீட்டில் தினமும் நூற்றுக்கணக்கானோர் குவிவது வழக்கம். ஆனால், கே.என்.நேரு அமைச்சராக இல்லாவிட்டாலும், அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் நூற்றுக்கணக்கானோர் இருப்பது வழக்கம். தற்போது அமைச்சராக இருப்பதால் சொல்லவே வேண்டாம்.

இந்த நிலையில்தான் அமைச்சர் கே.என்.நேரு ‘பவர் ஃபுல்’ அமைச்சராக இருந்தும், ‘எங்களுக்கு எதுவும் செய்யல!’ என கே.என்.நேருவின் சமுதாயத்தைச் (ரெட்டியார்கள்) சேர்ந்தவர்கள் புலம்புகின்றனர்! இது பற்றி ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நம்மை தொடர்பு கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

‘‘சார், பொதுவாக ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், அவர்களது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏதாவது செய்துகொடுத்து மேம்படுத்துவார்கள். ஆனால், அமைச்சர் கே.என்.நேருவிடம் நாங்கள் சென்று ஏதாவது கேட்டால், ‘எதுவும் செய்து கொடுப்பதில்லை’! அதையும் மீறி அவரைப் பார்க்கச் சென்றால், பலருக்கு முன் எரிச்சலடைந்து அவமானப்படுத்தும் விதமாக பேசுகிறார்! இதனால், அவரிடம் சென்று எதுவும் கேட்பதற்கே சங்கடமாக இருக்கிறது.

எங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் முதல்வர் அமைச்சர் பதவி கொடுத்தும், அவரால் எங்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. இனியாவது அமைச்சர் எங்களுக்கு எதாவது செய்தால் நன்றாக இருக்கும். நாங்கள் மற்ற சமுதாயத்தினரைப் போல் மெஜாரிட்டியாக இல்லை. இந்த நிலையில், அமைச்சரும் எங்களைப் புறக்கணித்தால் நாங்கள் எங்கே செல்வது?’’ என்றனர் ஆதங்கத்துடன்!

ரெட்டியார் சமூகத்தினரின் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal