அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் ஆளும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது விமர்சனங்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரே சேர வருவது வாடிக்கைதான்!

இந்த நிலையில்தான், சவுக்கு சங்கரின் ஆதரவாளரான வழக்கறிஞர் மற்றும் சவுக்கு சங்கரின் அட்மின்கள் மீது கும்பல் ஒன்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. வழக்கறிஞரான இவர் சவுக்கு சங்கர் ஆதரவாளர் என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று சவுக்கு சங்கர் மீடியாவை சேர்ந்த சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் ராஜாவை சந்திப்பதற்காக வேலாயுதம்பாளையம் வந்துள்ளனர். இந்த மூன்று பேரும் வேலாயுதம்பாளையம் பாலத்துரை பகுதியில் உள்ள பேக்கரியில் வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு காரில் வந்த இறங்கிய அடையாளம் தெரியாத 6 பேர்கள், வழக்கறிஞர் ராஜா மற்றும் சூரியா, பிரதீப் ஆகிய மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில், வழக்கறிஞர் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பித் தாக்கியுள்ளனர். அதனால் அவர்கள் 6 பேரும் காரில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களை துரத்திக்கொண்டு சென்ற இருவரும் தப்பியோடிய மர்ம நபர்கள் மீது பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ராஜா வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸார், தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். சவுக்கு சங்கர் ஆதரவாளர்கள் கரூர் பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal