தமிழக பா.ஜனதா மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்ததால் அதுபற்றி டெல்லி மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளிக்க சென்ற அண்ணாமலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பா. ஜனதா மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 66 மாவட்ட தலைவர்கள் 66 மாவட்ட பார்வையாளர்கள், மாநில நிர்வாகிகள் 32 பேர், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அண்ணாமலையை மண்டப வாசலில் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். பின்னர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி மற்றும் சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், இசை அமைப்பாளர் தினா, சக்கரவர்த்தி, கருப்பு முருகானந்தம், கனகசபாபதி, கார்த்தியாயினி, மலர்க்கொடி, ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பரபரப்பாக பேசினார். அவர் பேசியதாவது:- அடுத்த 7 மாதங்களுக்கு தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜனதா போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக அளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும். கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். சர்க்கசில் ஒரு கம்பியை பிடித்து தொங்கி விளையாடும்போது ரிஸ்க் எடுத்து இன்னொரு கம்பியை பிடித்து விளையாடி வெற்றி பெறுவது உண்டு. நம்மை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாகிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஜனவரி 2-வது வாரம் சென்னையில் 10 லட்சம் பேர் திரளும் பிரமாண்ட யாத்திரை நிறைவு விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal