இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் தமிழகத்தில் நடிகர் விஜய் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.
சமூக வலைதளங்களின் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி உள்ளது. அதில் தேர்தல் பிரச்சார அஸ்திரமாகவும், ரசிகர்கள் தங்கள் அன்பு மழை பொழியும் தளமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை ரசிகர்களிடையே மிகவும் நெருக்கமாக்கியதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றி உள்ளன. இதனால் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் தொடங்கி அண்மையில் வாட்ஸ் அப் சேனல் வரை தனித்தனியாக கணக்குகள் தொடங்கி ஆக்டிவாக இருப்பதன் மூலம் மக்களுடனான தங்களது தொடர்பை நெருக்கமாக வைத்துக் கொள்கின்றனர் பிரபலங்கள்.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட இந்திய அக்கவுண்ட்டுகள் பற்றிய டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் அரசியல் பிரபலங்கள் முதல் திரைப்பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இடம்பிடித்து உள்ளனர். அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளார்.
அதேபோல் மூன்றாவது இடத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் இடம்பிடித்து உள்ளார். நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் அப்படத்தை பற்றி அதிகளவிலான பதிவுகள் போட்டுள்ளதால், அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் தான் நான்காம் இடம் பிடித்துள்ளார். 5-வது இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 6-வது இடத்தில் தெலுங்கு நடிகர் பவண் கல்யாண் இடம்பெற்றுள்ளார்.
7-வது இடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும், 8-வது இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், 9-வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், 10-வது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் இடம்பிடித்து உள்ளனர். இந்த லிஸ்ட்டில் ரஜினியின் பெயர் இடம்பெறவில்லை. செப்டம்பர் மாதம் எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரே தமிழ் பிரபலம் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.