பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. கட்சி அறிவித்து விட்டது. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அ.தி.மு.க. உடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பா.ஜ.க. மேலிடம் முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கூட்டணி முறிவை தொடர்ந்து டெல்லி புறப்பட்டு சென்று இருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அங்கு மத்திய மந்திரி அமித்ஷா,  பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் சில தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் வந்திருக்கும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கொடிசியாவில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரை முன்னாள் சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.-வுமான பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமல்கந்தசாமி மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் என அ.தி.மு.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் திடீரென சந்தித்து உள்ளனர்.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிவுக்கு பிறகு கொங்கு சமூகம் அல்லாத அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர், தமிழக பா.ஜ.க.-வின் தற்காலிக பொறுப்பாளராக கூறப்படும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து இருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறி இருக்கிறது.
மேலும், இதன் மூலம் தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் வகையில், தேர்தல் நகர்வுகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு செய்வதன் மூலம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கவும் தமிழக பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal