தி.மு.க.வில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்ல சிவம் மாற்றப்பட்டு, தோப்பு வெங்கடாச்சலம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல்கள் அறிவாலயத்தில் இருந்து கசிகிறது!
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கானொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது, ஆளுமை மிக்க அமைச்சர்களைத் தவிர, அதாவது கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் கண்ணசைவில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களைத் தவிர்த்து மற்ற மாவட்டச் செயலாளர்கள் கண்டிப்புக்கு ஆளாகினர்.
இது பற்றி அறிவாலயம் தரப்பில் பேசியபோது, ‘‘சார், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்கு (திமுக) வாழ்வா… சாவா பிரச்னை..? ஏனென்றால் மீண்டும் பா.ஜ.க. வந்தால்… ‘நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!’ காரணம், திருச்சியில் நடந்த வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில், ‘அடுத்து பா.ஜ.க. வந்தால் நான் முதல்வராக இருக்க முடியாது. நீங்கள் அமைச்சர்களாக, எம்.எல்.ஏ.வாக இருக்க முடியாது! ஏன், நீங்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகக் கூட இருக்க முடியாது’ என ஓபனாக பேசினார் முதல்வர்.
இந்த நிலையில்தான், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் உள்ளனர். இதில் வடக்கு மாவட்டச் செயலாளர் நல்ல சிவத்தின் செயல்பாடுகளில் முதல்வருக்கு திருப்தி இல்லை. இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் தலைமைக்குச் சென்றும், நடவடிக்கை இல்லை. காரணம், ஒவ்வொரு முறையும் நல்ல சிவத்தின் பதவியை முத்துசாமி காப்பாற்றி வருகிறார்.
இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில், ‘உங்களது செயல்பாடுகள் திருப்தி இல்லை. இதே நிலை நீடித்தால் விரைவில் மாற்றப்படுவீர்கள்’ என்று முதல்வர் நல்லசிவத்தை நேரடியாகவே எச்சரித்தாக கூறப்படுகிறது. காரணம், ஈரோடு தி-முவில்தான் அதிக உட்கட்சிப் பூசல்கள் இருக்கிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு மா.செ. பதவியை தரலாம் என முடிவு செய்திருக்கிறாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். எனவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கலாம் என்கிறார்கள்.
ஏனென்றால், அ.தி.மு.க.வில் இருக்கும் போது, தோப்பு வெங்கடாச்சலத்தில் பணிகள் பற்றி அனைவரும் அறிந்தது. அதனால், அவருக்கு மா.செ. பதவியை கொடுக்கத் தயாராகிவிட்டால் ஸ்டாலின். அதே போல், கோவை, சேலம் உள்ளிட்ட மா.செ.க்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.