சமீபத்தில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உதயநிதியின் தலைக்கு சாமியார்கள் விலை வைத்த நிலையில், அவரது சகோதரியும் முதல்வரின் மகளுமான செந்தாமரை திருநள்ளாறு சட்டநாதர் கோயில்களில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற மலை கோயிலான இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். மேலும் தேவார நால்வர்களுள் திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமான இக்கோயிலில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற செந்தாமரை, சுவாமி அம்பாள் சட்டைநாதர் மற்றும் அஷ்ட பைரவர் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். இதையடுத்து, அவருக்கு சிவாச்சாரியார்கள் கோயில் பிரசாதங்களை வழங்கினர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடவுள் மறுப்பு பேசி வரும் நிலையில் தமிழக முதல்வர் முதலமைச்சரின் மகள் நேற்று திருநள்ளாறு, வைத்தீஸ்வரன்கோயிலிலும் இன்று சீர்காழி சட்டைநாதர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
ஸ்டாலினும் அபார கடவுள் நம்பிக்கை கொண்டவர். நாத்திகம் பேசினாலும், அவரவர் தனிப்பட்ட விஷயங்களிலோ, மற்றவர்களின் நம்பிக்கைகளிலோ தலையிடுவது இல்லை எனவும், பெரியார் வழியில் எதற்காக கடவுள் மறுப்பு பற்றி பேசுகிறோம் எனவும் பலமுறை ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ள நிலையில், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் தங்களது இறை நம்பிக்கை மற்றும் வழிபாட்டு நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக தலைமையின் கொள்கைகளையும், அவர்களது குடும்பத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் தொடர்புபடுத்தி சர்ச்சையை கிளப்புவோர் அதிகம். அந்த வகையில் திருநள்ளார், சட்டநாதர் கோயில்களில் செந்தாமரை மேற்கொண்ட சிறப்பு தரிசனத்தை, சமூக ஊடகங்களில் திமுக எதிர்ப்பாளர்கள் வழக்கம்போல சர்ச்சையாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.