கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சீமான் அறிவித்துள்ள நிலையில், தன்னை நீக்க தங்களுக்கு அதிகாரம் இல்லையென வெற்றிக்குரமன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வெற்றிக்குமரன், மதுரை மேற்கு தொகுதியை சேர்ந்த இவர் கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி ஒழுங்கு நடவடிக்கையின் பரிந்துரையின் பேரில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெற்றிக்குமரன்வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி விட்டதாக ஒரு கடிதத்தாள் சமூக வலைத்தளங்களில் கண்டேன். அது உண்மையா என தெரியவில்லை. உண்மை என்றால் என்ன காரணத்திற்காக என்னை நீக்கினீர்கள்? நான் செய்த தவறு என்ன?

வெளிப்படையாக கூற முடியாத தவறு என்றாலும் என்னை ஏன் அழைத்து விசாரிக்கவில்லை? நான் தவறு செய்திருந்தால் கண்டிக்கவும், தண்டிக்கவும் உரிமை உள்ள நீங்கள் ஏன் கடந்த ஆறு மாத காலமாக என் அழைப்பை கூட ஏற்க மறுத்து தொடர்பை தடை செய்தீர்கள்? யாரோ ஒருவர் உங்களிடத்தில் என்னைப் பற்றி கூறியிருந்தாலும் எப்படி உங்களால் நம்ப முடிந்தது 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய, உறவாடிய என்னை ஏன் புரிந்து கொள்ளவில்லை? தவறான ஒருவன் இத்தனை ஆண்டு காலத்தில் வெளிப்பட்டிருக்க மாட்டானா?

நான் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன். என் நினைவுக்கு எட்டிய வரையில் ஒரு சிறு தவறு கூட செய்யவில்லை. உங்களின் மீது இருந்த அதீத அக்கறையின் காரணமாக தற்பொழுது, உங்களின் தோள் மீது ஏறி அமர்ந்திருக்கும் ஒருவனிடம் அவனை என் சொந்த தம்பியாக நினைத்து உங்களைப் பற்றி வருந்தி புலம்பி இருக்கிறேன். அதைத்தவிர வேற எந்த தவறும் செய்யவில்லை.

என்னை நீக்கியதாக வெளியிட்டு இருக்கிற கடிதத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை நான் மீறியதாக குற்றம் சாட்டி நீக்கி இருக்கிறீர்கள். நான் மீறிய கட்சியின் கட்டுப்பாடு என்ன? ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் படி நீக்கி உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். ஒழுங்கு நடவடிக்கை குழுவில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? யார் யாரெல்லாம் அவர்கள்? இந்த குற்றச்சாட்டு குறித்து என்னிடம் விசாரித்தார்களா? என்னிடம் விசாரணை செய்து தங்களிடம் அறிக்கை ஏதும் சமர்ப்பித்தார்களா? அப்படி சமர்ப்பித்து இருந்தால் அதனுடைய விவரங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு ஆயுள் காலம் என்பது 14 வருடம். என்னுடைய மிக முக்கியமான காலமான இந்த 14 வருடத்தை. ஒரு ஆயுள் காலத்தை உங்களுக்காகவும் இந்த கட்சியின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே செலவழித்து இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை நேரில் அழைத்துக் கூட பேசாமல் புறக்கணித்ததை அவமானமாக கருதுகிறேன். பதவிக்காகவும், இன்ன பிற சுகத்திற்காகவும் காத்துக் கிடப்பவன் தான் காலில் விழுந்து கிடப்பான். நான் நல்லவன். உண்மையானவன். நேர்மையானவன். நல்ல அரசியல் செய்ய வந்தவன். யாரிடத்திலும் எவரிடத்திலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை. என்பதை உங்களுக்கு தெரிவித்து மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களிடத்தில் இருந்து பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

எல்லாம் தெரிந்த உங்களுக்கு நமது கட்சியின் விதிகள் தெரியாதது கவலை அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விதிமுறைகளின் படி என்னை நீக்குவதற்கு உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதையும் மாநில பொறுப்பில் இருக்கும் என்னை பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நான் நாம் தமிழராகவே தொடர்கிறேன். என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal