கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் மற்றும் பனை விதைகளை நடவு செய்து உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்தி வருகிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் வேரான மு.கருணாநிதியின் ‘கலைஞர் நூற்றாண்டு’ விழா கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விழா அவரை பெருமைப்படுத்தும் விழாவாக மட்டும் சுருங்கிவிடாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் வகையிலும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டிஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட கள்ளத்திமடம், புதுப்பட்டி, மருத்தம் புதூர் ஆகிய கிராமங்களில் இரண்டாம் கட்டமாக பனை விதை நடும் நிகழ்ச்சியை நடத்தினார்.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுசூழல் அணியில் மாவட்ட அமைப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

மேலும், ஆலங்குடியில் உள்ள ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் வருகிற 20ம் தேதி விளையாட்டுப் போட்டி, ஓவியப்போட்டி (கலைஞர் அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்கள் பற்றி), கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி என ஏராளமான போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியையும் முன்னாள் அமைச்சர் பூங்கேதை ஆலடி அருணா நடத்துகிறார். இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுப் பொருட்களும் மற்றும் ரொக்கமும் காத்திருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் போட்டியில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. தவிர, ஊக்கப்பரிசுகளும் அளிக்கப்படுகிறது.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஏராளமான நிகழ்ச்சிகளை முன்னாள் அமைச்சர் பூங்கோதை சத்தமின்றி, ஆரவாரமின்றி நடத்தி வருவதுதான் உடன் பிறப்புக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal