பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கும் நிலையில், அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். அ.தி.மு.க. விலகியதால் கூட்டணிக் கட்சிகளும் மதில் மேல் பூனையாக இருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவே கிடைத்தது. இதனை தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போதும் தோல்வியே கிடைத்தது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகோடு கூட்டணி அமைக்க உள்ளதாக அதிமுக மற்றும் பாஜக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதற்கான பணிகளை இரண்டு கட்சிகளும் மேற்கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் அதிமுக தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து அதிமுக தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது.

இதன் காரணமாக இரண்டு தரப்பும் கருத்துக்களை கூறியதால் மோதல் வலுத்தது. இதனையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக அறிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியோடு வெற்றி பெறலாம் என்ற பாஜகவின் கனவு கனவாகவே மாறியது. இதனை அடுத்து அதிமுகவுடன் மீண்டும் சமரச பேச பாஜக தேசிய மேலிடம் முயன்றது. இதற்காக அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டது. ஆனால் அதிமுக தலைமையோ தங்களது முடிவிலிருந்து பின் வாங்குவது இல்லை என்று கூறிவிட்டதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் நிலை குறித்தும், அதிமுக- பாஜக கூட்டணி இல்லாததால் ஏற்பட்டது பின்னடைவு தொடர்பாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேசிய தலைமைக்கு அறிக்கை கொடுத்திருந்தார். இதனை அடுத்து இன்று காலை விமானம் மூலமாக அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார். அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு பிறகு முதல் முறையாக டெல்லி செல்லும் அண்ணாமலை, அங்கு தனது விளக்கத்தையும், அடுத்த கட்டமாக தமிழகத்தில் பாஜக தலைமையில் அமைக்க உள்ள கூட்டணி தொடர்பாகவும் தனது கருத்தை தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal