எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. ‘உடைத்து விளையாடி’ வருகின்றனது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இருந்து விலகியதால் எஸ்.பி.வேலுமணியை வைத்து ‘உடைத்து விளையாட’ முயற்சித்த நிலையில் அதற்கு எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளத்தில் ‘என்றென்றும் அதிமுககாரன்..’ என்று பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்தக் கேப்ஷனுடன் அவர் ஒரு பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அது அதிமுக கொடியுடன் அவர் சைக்கிள் பேரணி சென்ற புகைப்படமாகும். தனது ஆரம்பகாலத்தை நினைவுகூர்ந்து இன்றும், என்றும் தான் அதிமுககாரன் என்று அவர் வலியுறுத்தும் வகையில் அந்தப் படம் அமைந்துள்ளது.
அதிமுகவில் எஸ்.பி.வேலுமணியால் பிளவு ஏற்படலாம், அவர் மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் பிளவை ஏற்படுத்தியது போல் ஏற்படுத்தலாம் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்த நிலையில் அவர் இவ்வாறாக தனது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தைப் பகிர்ந்து பரபரப்புப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எஸ்.பி.வேலுமணி இவ்வாறு பதிலடி கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, அதிமுக – பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும், தொடரக் கூடாது என இரு அணிகளாக கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்பட்டது. சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்ட சிலர் பாஜக கூட்டணியே கூடாது எனக் கூறி வந்தனர். ஜெயக்குமார் இதன் நிமித்தமாக நிறைய ஊடகப் பேட்டிகள் அளித்தும் வந்தார். ஆனால் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்றோர் பாஜகவுடன் கூட்டணி அவசியம் என்று கூறிவந்தனர். இந்நிலையில் தான் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கூட்டணி முறிவு தீர்மானத்தை எஸ்.பி.வேலுமணி தான் வாசித்தார் என்றும் அப்போது கட்சித் தலைமையின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாக அவர் கூறியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பின்னர் கூட்டணி முறிவு குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளத்தில் என்றென்றும் அதிமுககாரன்.. என்று பதிவிட்டு உட்கட்சிப் பூசல் சலசலப்புகளுக்கு வேலுமணி வழிவகுக்கலாம் என்ற வாத, விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.