‘பா.ஜ.க.வைப் பற்றி யாரும் பேசவேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கும் நிலையில், ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’யாக முன்னாள் அமைச்சரும், மா.செ.வுமான கே.சி.கருப்பண்ணன் அ.தி.மு.க. & பா.ஜ.க. பற்றி பேசிய விவகாரம்தான் அ.தி.மு.க.விலேயே அணலடித்துக் கொண்டி ருக்கிறது.

அதிமுக -& தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான உச்சக்கட்ட மோதலை அடுத்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி அரசியல் அரங்கை அதிர வைதத்தார். பின்னர், கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வரவேற்பு அளித்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், அதிமுக துணைபொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு அதனை எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், ‘‘- 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டுமாம். அதன் மூலம் மோடி பிரதமராக வேண்டுமாம். அதேநேரம் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளாரக ஏற்க வேண்டுமாம்.

இதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? வாக்குச் வாசடியில் 5 பேர் 10 பேர் இருக்கிற ஒரு கட்சியின் தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லி 2.5 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியை வலியுறுத்தினால் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். இதனால் தான் அதிமுக பாஜக முறிந்தது’’ என தெரிவித்துள்ளார்.

மாஜி மந்திரியின் கருத்து பற்றி அ.தி.மு.க.வின் மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கும் எங்கள் கட்சியின் தலைவரையே தரக்குறைவாக அண்ணாமலை பேசியதால்தான் கூட்டணி முறிந்தது.

ஆனால், அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக அ.தி.மு.க.வினர் ஏன், எதற்காக ஏற்கவேண்டும். 2026&ல் எடப்பாடியார்தான் முதல்வர் என்பதை பா.ஜ.க.வினரே ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கே.சி.கருப்பண்ணன் இப்படியொரு விஷயத்தை கிளறியிருக்கக் கூடாது. அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே, அ.தி.மு.க.விற்கு எதிர்விணையை ஆற்றும் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, எடப்பாடியார் ‘பா.ஜ.க. பற்றி யாரும் விமர்சித்து பேசவேண்டாம்’ என்று அறிவுறுத்திய நிலையில், கே.சி.கருப்பண்ணன் புதுவிதமான கருத்தை தெரிவித்து புதிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார். இது அ.தி.மு.க.வின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல! எடப்பாடியாருக்கு நெருங்கிய உறவினர் என்பதால் எதைவேண்டுமானாலும் பேசலாம் என கே.சி.கருப்பண்ணன் நினைத்துவிடக்கூடாது. அது எடப்பாடியாருக்கே எதிராக முடிந்துவிடும்’’ என்று எச்சரிக்கை மணி அடித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal