‘கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என யாருக்குமே விசுவாசமாக இருக்காதவர்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்’ என கே.பி.முனுசாமி இன்று விளாசித் தள்ளியிருக்கிறார்.

அதிமுக பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில் பாஜகவுடனான கூட்டணி குறித்து தனது சென்னையில் அணி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமசந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பண்ருட்டி ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அண்ணாமலை அண்ணாவை பற்றி விமர்சித்ததெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு கவலை தரவில்லை, அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசிய 4 நாட்களுக்கு பிறகே எடப்பாடி தரப்பினர் இந்த விஷயத்தை கையில் எடுத்தார்கள். இவர்கள் பாஜகவை எதிர்க்கக் காரணமே 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை பேசியதுதான், எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அப்போ நான் மாப்பிள்ளை இல்லையா, அதுதான் அவருக்கு பிரச்சினை. மற்றபடி அண்ணாவை பற்றி பேசியதோ ஜெயலலிதாவை பற்றி பேசியதோ அவர்களுக்கு பிரச்சினையே இல்லை என்றார்.

மேலும் நம்பகத்தன்மை இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு கே.பி. முனுசாமி இன்றைய தினம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின் போது திமுகவில் இருந்தார் பண்ருட்டி ராமசந்திரன். அங்கு அவர் விசுவாசமாக இல்லை.

பின்னர் அங்கிருந்து அவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அதிமுகவுக்கு வந்தார். அவரிடமும் விசுவாசம் இல்லை. மத்தியில் காங்கிரஸுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதாஆனவுடன் அவருடைய தலைமையின் கீழ் பணியாற்றினார்.

ஆனால் அவரோ நால்வர் அணியை உருவாக்கி காங்கிரஸுடன் இணைய முயற்சித்தார். அவரை ஆந்திராவில் என்டி ராமாராவின் ஆட்சியை கவிழ்க்க முயன்ற பாஸ்கர் ராவுடன் ஒப்பிட்டுதான் பேசுவார். பின்னர் பாமக, தேமுதிகவுக்கு சென்று அங்கு விசுவாசத்தை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமியிடம் விசுவாசமாக இல்லை. ஏற்கெனவே பல பிரச்சினைகள் இருக்கும் போது அந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்கும் ஐடியாவை செயற்குழுவில் கொடுத்தார்.

அதனால் அவரை நாங்கள் உட்காருமாறு சொன்னோமே தவிர வெளியேற்றவில்லை. தமிழகத்தில் நம்பகத்தன்மையற்ற ஒரு தலைவர் என்றால் அவர் பண்ருட்டியார்தான். பாஜக இல்லாவிட்டால் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி ஓடியிருக்கும் என பாஜகவின் மூத்த நிர்வாகி எச்.ராஜா கீழ்த்தரமாக பேசியுள்ளார். நாங்கள் கை காட்டாவிட்டால் அவர் எம்எல்ஏ ஆகியிருக்க முடியாது. அதிமுகவின் செல்வாக்கு நாடாளுமன்றத் தேர்தலில் கண்கூடாக தெரியும்.

துரோகி ஓபிஎஸ்ஸுடன் மற்றொரு துரோகி பண்ருட்டியாரும் இணைந்து கொண்டார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal