தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை இனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடைபெற உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் துறைகள் மாற்றப்பட்டு, இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். தற்போது வரும் அக்டோபர் 3 முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் துறைகளை மாற்றம்செய்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிராகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் தாமாக முன்வந்து சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்திருந்தார். இனி அந்த வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வேறு வழக்குகளை விசாரிப்பார். இதேபோல, மற்ற நீதிபதிகளின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷை மாற்ற வேண்டும் என அமைச்சரும், லஞ்ச ஒழிப்புத்துறையும் முறையிட்டது குறிப்பிடத்தக்கது. மாண்புமிகுக்களின் ‘நிம்மதி பெருமூச்சு’ நீடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal