தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் மனு கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தால்தான் அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்த வகையில்தான் சமீபத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. 2023 மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5329 ஆக இருந்தது.

அதன் பிறகு அரசு எடுத்த கொள்கை முடிவு படி 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்போது 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது. 500 மதுக்கடைகளை மூடியதை தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்போது என்ன செய்யலாம் என்று அரசு யோசித்து வருகிறது. இதனால் சமீபத்தில் நடந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் 500 மதுக்கடை மூடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது என விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது மதுபாட்டில்கள் விலையை கணிசமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தினால் மக்களுக்கு பெரிய சுமையாக தெரியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்டுக்கு ஏற்ப 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் போது பல்வேறு புகார்கள் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அது மட்டுமின்றி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விலையை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.

ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும் முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிராண்டுகள் அடிப்படையில் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது. இதே போல் பீர் பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது என்னென்ன சரக்கு எவ்வளவு விலை என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal