தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் 20 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் 600-ஐ தாண்டி பதிவாகி உள்ளது.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 866 பேருக்கும், பிப்ரவரி மாதம் 641 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறையின் தீவிர நடவடிக்கைகள் மூலம் டெங்கு பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குறைந்த அளவில் பதிவாகியது. அதன்படி, மார்ச் மாதம் 512 பேரும், ஏப்ரல் மாதம் 302 பேரும், மே மாதம் 271 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். பின்னர், இது சற்று அதிகரிக்க தொடங்கி ஜூன் மாதத்தில் 364 பேரும், ஜூலை மாதத்தில் 353 பேரும் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல ஆகஸ்டு மாதத்தில் 535 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் இம்மாதம் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், கடந்த 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வாரத்தில் மட்டும் 227 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4 ஆயிரத்து 454 ஆக பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal