அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்த நிலையில் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழலாம். கூடுதல் இடங்கள் கொடுத்தால் காங்கிரசும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- சந்தர்ப்பவாதம், சபலங்களுக்கு காங்கிரசில் இடமில்லை. காங்கிரஸ் அணி மாறும் என்று தகவல் பரவுவது அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் திட்டமிட்டு பரப்பும் வதந்தி.

இந்தியா கூட்டணி உடைய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசையாக இருக்கலாம். ஆனால் எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி. மதசார்பற்ற அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் ராகுல் தலைமையிலான காங்கிரசுக்குத்தான் உண்டு என்பதை மக்கள் அறிவார்கள். இதற்கு உற்ற துணையாக இருப்பது தி.மு.க.. இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்.

மக்கள் விரோத மோடி அரசை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள அத்தனை கட்சிகளுக்கும் இருக்கிறது. கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது உரிய நேரத்தில் தலைவர்களால் முடிவு செய்யப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதைவிட குறையும் என்று யார் சொன்னது? கூடுதலான சீட் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal