‘தலைவா’ படத்திலிருந்து அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு மாபெரும் கட்சிகளும் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில்தான் ‘என்ட்ரி’ கொடுக்க ஆரம்பித்தார் விஜய். இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் போட்ட எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான லியோ வருகிற அக்டோபர் 19-ந் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

லியோ பட ரிலீசுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ளதால், அப்படத்தின் ஆடியோ லாஞ்சை செப்டம்பர் 30-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கி வந்த நிலையில், ரசிகர்களின் நலன் கருதி லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதாக நேற்று இரவு ஷாக்கிங் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது.

லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை என படக்குழுவே தங்களது டுவிட்டில் குறிப்பிட்டு இருந்தாலும் அரசியல் நெருக்கடியின் காரணமாகவே இந்நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதாகவே சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது. லியோ படத்துக்கு அரசியல் நெருக்கடி இருப்பதாக முதன்முதலில் கூறிய சவுக்கு சங்கர் கூட ‘ஆடியோ லாஞ்ச் கேன்சல் செய்யப்பட்டதை பார்த்து எங்களை முட்டாள் ஆக்காதீர்கள்’ என பதிவிட்டு இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க நடிகர் விஜய்க்கு ஆதரவளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் #WeStandWithLEO என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த 2014-ம் ஆண்டு விஜய் போட்ட எக்ஸ் தள பதிவு ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர், தலைவா நம்ம பயந்து ஒதுங்குரோமா, இல்ல பாய பதுங்குரோமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த விஜய், பயமும் இல்லை, பதுங்கவும் இல்லை, அனுபவம் தேடுறோம் அவ்வளவுதான் என கூலாக ரிப்ளை செய்துள்ளார். விஜய்யின் இந்த பழைய பதிவு தற்போதைய சூழலுக்கு ஒத்துப்போவதாக கூறி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

சமீபகாலமாக விஜய்யின் படம் வெளியாகும் போது அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்படுவதாக கூறிவந்தனர். ‘வாரிசு’ திரைப்படம் ரிலீஸின் போதும் உதயநிதிக்கும், விஜய் தரப்பிற்கும் ஏற்பட்ட மோதல் வெட்ட வெளிச்சமானது. இது பற்றி நேரடியாக உதயநிதியிடமே செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பியபோதும், அசால்டாக பதில் அளித்தார் அமைச்சர் உதயநிதி!

‘லியோ’ படத்தின் ஆடியோ ரீலிஸ் ரத்தானதன் பின்னணியில் அரசியல் நெருக்கடிகள் இருக்கிறது என்பதை உணர்ந்த ரசிர்கள் தற்போது, விஜய்க்காக ‘விஸ்வரூபம்’ எடுத்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal